Knit India Magazine

திருப்பூர் மூலிக்குளம் பராமரிப்பு பணி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுக்கிறது!

திருப்பூர் மூலிக்குளம் பராமரிப்பு பணி! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுக்கிறது!

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கரில் அமைந்துள்ளது.  அதன் வழங்கு வாய்க்கால் அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. வேர்கள் அமைப்பு தொடர்ந்து 7 ஆண்டுகளாக இதைப் பராமரித்து வருகிறது.

தற்பொழுது நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு நிதி உதவியை ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினர்களின் பங்களிப்பு வாயிலாக TEA அறக்கட்டளை வழங்குகிறது. திருப்பூர் நகரத்தின் மையப் பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கும் இந்த வாய்க்கால் சுமார் 2.5 கிலோமீட்டர் பாளையக்காடு, கருமாரபாளையம் மற்றும்  மண்ணறை வழியாக மூலிக்குளம் வந்து சேர்கிறது. நகரத்தின் பகுதிகளின்  வழியாக வருவதால் பல இடங்களில் புதர் மண்டியும்,  சாக்கடைகளால் சேறும் சகதியுமாக இருக்கிறது.

அதனால் தற்பொழுது இது தூர் வாரப்படுகிறது, இதன் மூலம் நொய்யல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் கொண்டுவரப்பட்டு குளத்தில் நிரப்பப்படும், இதன் மூலம் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இது செறிவூட்டப்படுகிறது.

இந்தப் பணியின் தொடக்க விழா  21.07.2024 -ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்காடு பகுதியில் பூஜை போட்டுத் தொடங்கப்பட்டது. 

இந்த விழாவிற்கு  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம்.சுப்ரமணியம் தலைமை வகித்தார். பொருளாளர்  கோபாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாநகராட்சி ஆணையர்  பவன்குமார் ஐ.ஏ .எஸ்  கலந்து கொண்டார்.

வேர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். இது பற்றி வேர்கள் அமைப்பினர் கூறும்போது “இப் பணியை  தொடங்கும் முன்னர் இப்பணியை விவரித்து உதவி செய்ய தங்களால் இயலுமா என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கே.எம் சுப்பிரமணியம் அவர்களை அணுகி உதவி கேட்ட போது, “நிச்சயம்  செய்துவிடலாம்”என்று கூறினார்.  

“திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், டீ அறக்கட்டளை வாயிலாக பல்வேறு சமூக பணிகளை உறுப்பினர்கள் உதவியுடன் முன்னெடுத்து வருகிறோம் அந்த வகையில் மூளி குள பணிக்கு அந்தப் பகுதியை சார்ந்த எங்கள் உறுப்பினர்கள் உதவியுடன் இப்பணியை முன்னெடுக்க வேர்கள் அமைப்பிற்கு உதவுகிறோம்”என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம் சுப்பிரமணியம் கூறினார்.

Share this article