Knit India Magazine

திருப்பூரில் பெண்கள் நலன்களுக்கான மெச்சத்தக்க முன்னெடுப்பு!

திருப்பூரில் பெண்கள் நலன்களுக்கான மெச்சத்தக்க முன்னெடுப்பு!

பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் சங்கத்தின் அங்கமான திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பு (TIRUPUR STAKEHOLDERS FORUM -TSF) மற்றும் TEA பெண் தொழில் முனைவோர் துணைக்குழுவின் முன்னெடுப்பில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினருடன் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் நிறுவனமான BNT இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் (M/s. BNT Innovations Pvt Ltd.,) நடைபெற்றது.

திருப்பூர் தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பின் தலைவர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர்  வி. இளங்கோவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  என்.திருக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்கத்தின் இணை செயலாளர்  குமார் துரைசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பெண் தொழில் முனைவோர் துணைக் குழுவின் தலைவர் திருமதி. சுமிதா ரவி, உறுப்பினர் திருமதி. சுகந்தி, ரோட்டரி அமைப்பின் சார்பில் மகப்பேறு மருத்துவர் திருமதி அனிதா விஜய், திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் டி. கார்த்திகேயன், திட்டத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் V. G. ஆனந்த் ராம்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 வி இளங்கோவன் தனது தலைமை உரையில் TEA பெண் தொழில் முனைவோர் துணைக்குழுவின் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சங்கத்துடன் இணைந்து திருப்பூரின் அனைத்து நிறுவனங்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உதவியாக இருக்கும் ரோட்டரி அமைப்பிற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

சங்கத்தின் பொது செயலாளர் என். திருக்குமரன் ” உலகம் முழுவதும் வருடத்திற்கு 4.50 கோடி பெண்கள், இந்தியாவில் மட்டும் 1.50 கோடி பெண்கள் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், TEA, TSF மற்றும் ரோட்டரியின் பெண் தொழிலாளர்களுக்கான வருமுன் காக்கும் முயற்சியான இந்த திட்டத்தை மகளிர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்று கூறினார்.

சங்கத்தின் இணை செயலாளர்  குமார் துரைசாமி  பேசும்போது, “பெண் தொழிலாளர்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு அவசியம் தேவை. நாம் செய்யும் செயல் இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியுள்ள இந்த திட்டத்தின் சிறப்பினை எடுத்துக் கூறி,  பெண் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்று கூறினார்.

திட்டத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. V.G. ஆனந்த் ராம் மற்றும் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தலைவர் டாக்டர் S.கார்த்திகேயன் ஆகியோர் இந்த திட்டத்தைப் பற்றியும், திட்டத்தின் நோக்கம் மற்றும் பெண்களுக்கு இந்த திட்டம் எவ்வளவு பயனுள்ளது என்பதைப் பற்றியும் விளக்கிப் பேசினார்கள்.

ரோட்டரி அமைப்பின் சார்பில் மருத்துவர் திருமதி. அனிதா விஜய் அவர்கள், பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள், புற்றுநோயினால் ஏற்படுகின்ற விளைவுகள் இவை அனைத்தையும் விளக்கிக்கூறி அதற்கான தடுப்பு முறைகள் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சி குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.K.M. சுப்பிரமணியன் அவர்கள் “60 சதவீதம் பெண்கள் வேலை செய்யும் பின்னலாடை நிறுவனங்களில், அவர்களின் உடல் நலனைப் பேணுவதில் உறுப்பினர் நிறுவனங்கள் மட்டுமன்றி, சங்கத்திற்கும் அக்கறை உள்ளது என்பதைப் குறிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை கடந்த 6 மாதங்களாக  ஏற்பாடு செய்து வருகிறோம். முற்றிலும் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்கள் தங்கள் உடல் நிலை குறித்த சந்தேகங்களை மருத்துவரிடம் விவாதித்து பயன்பெற வேண்டும்  ஆரோக்கியமான தொழில் சூழல் நிலவ வேண்டும் என்பதும், எல்லா விதத்திலும் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம் ” என்று கூறினார்.

Share this article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *