51 வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்கத்திற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறும் இந்த ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த ஏற்றுமதியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய பின்னலாடை கண்காட்சி (India International Knit Fair)அமைப்பின் தலைவர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் டாக்டர் A சக்திவேல் தலைமை வகிக்க ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே. எம். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
டாக்டர் A சக்திவேல் பேசும்போது 51 வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியைப் பற்றி எடுத்துக் கூறியதுடன், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உலகளாவிய பொருளாதார சூழல், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதால் இந்தியாவிற்கான வர்த்தக வாய்ப்பு பெருமளவில் அதிகரித்திருக்கிறது என்று குறிப்பிட்டார். எதிர்வரும் 2030-ல் ஐரோப்பாவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள வளம் குன்றா வளர்சிக் கோட்பாட்டின் சட்டங்களை எதிர்கொள்ளத் திருப்பூர் தயாராகி வருகிறது. அதற்கான துல்லிய திட்டமிடல்களை தான் சார்ந்த அப்பேரல் மேட்-அப்கள் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் (AMHSSC) அமைப்பின் வாயிலாக ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட ப்ளூசைன் டெக்னாலஜீஸ் (Bluesign Technologies AG) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ஏற்றுமதியாளர்களை 2030 ஆம் ஆண்டை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளைத் துவக்கியுள்ளோம்.
இது நிச்சயமாக இந்தியாவிற்கான வர்த்தக வாய்ப்பை,குறிப்பாக திருப்பூருக்கான வாய்ப்பை இரு மடங்காக உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார். மேலும் சுற்றுச் சூழலுக்கு இணக்கமான பசுமை சார் உற்பத்தி (ESG) முறையில் முதலீடு அதிகமாக இருக்கும் காரணத்தால், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை ஆதரிக்க அரசாங்கத்தின் நிதி உதவி மிகவும் தேவை என்றும் கூறினார். மேலும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்ட நிதியுதவிக்கும் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசுகையில், சுற்றுச் சூழலுக்கு இணக்கமான பசுமை சார் உற்பத்தி (ESG) முறையில் திருப்பூர் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் தொழில்துறையின் முன்னேற்றத்திற்காக டாக்டர். ஏ.சக்திவேல் அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் மேற்கொண்ட செயலாற்றி வருவதையும் பாராட்டினார். வேலைவாய்ப்பு, கண்டுபிடிப்பு, உற்பத்தித்திறன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த முன்மாதிரியாக திருப்பூர் கிளஸ்டர் விளங்குகிறது என்று குறிப்பிட்டதுடன் தமிழ்நாடு என்பது தரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காக அறியப்பட்ட மற்றும் தொழில்கள் செழிக்க ஒரு சிறந்த இடம் என்றும் கூறினார். மேலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து வகையிலும் தொழில்துறைக்கு ஆதரவளித்து, பல மடங்கு வளர்ச்சியை உறுதி செய்யும் என்றார்
குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் ஜவுளித் தொழிலுக்கு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும் திறன் திட்டங்கள், ஜவுளிக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பல நல்ல முன்மொழிவுகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். திருப்பூரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சங்கம் மேற்கொண்ட பணிகளான, பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு, மரத்தோட்டங்கள், ஏரிகளை சுத்தம் செய்தல், நொய்யல் நதி புத்துயிர்ப்பு ஆகிய அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை கூறினார்.
திருப்பூரில் செயல்படுத்தப்பட்ட பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு (ZLD) என்பது இந்தியாவில் மட்டுமன்றி உலகில் எங்கும் இல்லாத மிகப் பெரிய சாதனை என்று பாராட்டினார். தொழில்துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்தும் விதமாக ஜவுளி அமைச்சகத்தால் UN பெண்கள் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன் முதன்முதலாக திருப்பூரில் ஒரு பள்ளி வளாகத்தில், டாக்டர் சக்திவேல் அவர்களால் துவங்கப்பட்ட இந்த கண்காட்சி, அவரது சீரிய உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் இதற்கென்று தனியாக சர்வதேச தரத்தில் தனியாக ஒரு வளாகத்தை உருவாக்கி, இன்று 51 வது கண்காட்சி நாளை நடக்க இருக்கிறது. இந்த கண்காட்சியின் வாயிலாக, ஒவ்வொரு வருடமும் திருப்பூருக்கான புதிய சர்வதேச வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகிறார்கள்.
திருப்பூரின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது இந்த கண்காட்சி. ஏற்கனவே திரு.சக்திவேல் அவர்கள் கூறியது போல, வளம் குன்றா வளர்ச்சிக் கோட்பாடுகளை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாது, தொடர்ந்து அவர் கடந்த பத்து வருட காலமாக வலியுறுத்தி வரும், செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்தியினை (MMF Garments), ஒவ்வொரு நிறுவனமும், குறைந்தது மொத்த உற்பத்தியில் 20 சதவிகிதம் செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தற்போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும், அதை வலுவாக்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்க முனைந்துள்ளோம்.
இங்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மை செயலாளர் திரு. திரு தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். அவர்களிடத்தில், பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளோம். அதில் குறிப்பாக ஓடிஸா, பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், இந்த உற்பத்தி தொழிலுக்கு அளிக்கக்கூடிய சலுகைகளை மேற்கோள் காட்டி தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைவான மாவட்டங்களில், இது போன்ற சலுகைகள் கொடுக்கப்படவேண்டும் என்றும் இதன் வாயிலாக இந்த தொழிலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதோடு, வேலைவாய்ப்புடன் பொருளாதார சுழற்சிக்கும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் வலுவூட்டுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்”என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், டெக்ஸ்டைல் பையிங் ஏஜெண்ட்ஸ் அமைப்பின் சார்பில், அதன் தலைவர் திரு. V. இளங்கோவன் மற்றும் இந்திய பின்னலாடை கண்காட்சி அமைப்பின் சார்பில் Ms. ரோகினி சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
Leave a Reply