திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியும் பள்ளிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா,திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஆலோசனைக் குழு உறுப்பினர் மைக்கோ வேலுச்சாமி முன்னிலை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் திருக்குமரன் வரவேற்புரை ஆற்றினார். “திருப்பூரின் வளர்ச்சியும் சங்கத்தின் சமூகப் பணிகளும்” எனும் தலைப்பில் இணைச் செயலாளர் குமார் துரைசாமி பேசினார். சங்கத்தின் கௌரவத் தலைவர் பாப்பீஸ் சக்திவேல் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார். ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை குழு சேர்மன் சிவசுப்பிரமணியம், ஆர்பிட்ரேசன் சப் கமிட்டி சேர்மன் ராமு, செயற்குழு உறுப்பினர் பிரேம் அகர்வால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவி மகாலட்சுமி-க்கு ரூ.10,000/- ஊக்கத்தொகை மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 15 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டும், நினைவுப்பரிசும், 50 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2,08,000/- ஊக்கத்தொகையும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. அதன்படி முதலிடம் பெற்ற 17 பேருக்கு ரூ.5,000/-, இரண்டாமிடம் பெற்ற 17 பேருக்கு ரூ.4,000/-, மூன்றாமிடம் பெற்ற 15 பேருக்கு ரூ.3,000/- ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply