News & Announcements

வாரிசு சான்றிதழ் பற்றிய சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்!

Spread the love

ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அவர் இறந்த பின் அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் அவரது வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியம்.

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?

ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இச்சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெற முடியும். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்துவிட்டால் அவருடைய தாய், மனைவி , திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசு சான்றிதழ் பற்றிய கேள்விகள்-பதில்கள் !

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் என பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் ( Family Pension ) மற்றும் பணிப்பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

எங்கே விண்ணப்பிப்பது?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கிறது.

வாரிசுச் சான்றிதழ் ( Legal Heir Certificate ) கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் ( Death Certificate ), வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ( Address Proof ) ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி ( Village Administration Officer ) மற்றும் வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector ) மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

விண்ணப்பிக் என்னென்ன ஆவணங்கள் தேவை?

இறந்தவரின் இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்களின் நகல் இரண்டும் வேண்டும்.

எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவுசெய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒரு வருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு அருகிலுள்ள உரிமையியல் (civil)  நீதிமன்றத்திற்கு சென்று விண்ணப்பித்து, வழக்கறிஞர் மூலம் பிரபல தமிழ் நாளிதழில் வாரிசு சான்றிதழ் கோரியுள்ள விளம்பரத்தை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் ஆட்சேபணை யாரும் தெரிவிக்காத பட்சத்தில் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதனை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெற முடியும்.

சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால்?

ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப்பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்பு பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.

விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?

விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படவேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான அல்லது மறுப்பதற்கான காரணத்தை வட்டாட்சியர்  அவர்கள் ( Tahsildar – Taluk Office )  கூற வேண்டும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து (adopted ) எடுக்கப்பட்டவர்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் ( Legal Heir Certificate ) கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை (Legal Heir Certificate ) தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.

இறங்குரிமைச் சான்றிதழ் (Succession_certificate)

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு (Investment ) / பங்குகள் ( Shares ) மற்றும் அவருக்கு வர வேண்டிய கடன் போன்ற பணப்பலன்கள் பெற தனக்கு சட்ட பூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் ( Court ) மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமைச் சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் ( Legal Heir Certificate ) இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள் ( Shares ) /முதலீடுகள் (Investments ) முதலிய வற்றில் உரிமை இருப்பதாக கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம்.

இதற்காக இந்த ஐந்து பேரும் நீதிமன்றத்தை அணுகி தாங்கள்தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமைச் சான்றிதழ் வழங்கும்.

மாற்று வழி

இறங்குரிமைச் சான்றிதழ் பெறுவதற்கு ரூ 20 /-  மதிப்புடைய பத்திரத்தாள் ஒன்றில் , இறந்தவருடைய வாரிசுகள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து, அவரிடம் பணப் பலன்களை அல்லது வாரிசுக்கான வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை என உறுதிசெய்து கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலனை செய்து அவர் சான்றிதழ் வழங்குவார்.

ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்த காணாமல்போன குடும்ப உறுப்பினர் குறித்து புகார் அளித்து, காவல்துறை மற்றும் நீதி மன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

எப்போதெல்லாம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்?

குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந் து அவர்களுக்குள் வாரிசுக் குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிற போதும் சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசுச் சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசுச் சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார். குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்குப் பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.  குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார்.

போலியான ஆவணங்கள் மூலம் வாரிசுச் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தைஅணுகி அந்த வாரிசுச் சான்றிதழை ரத்து செய்ய முடியும்.

 செல்வகுமாரி நடராஜன்

வழக்கறிஞர்

உச்சநீதிமன்றம், புது டெல்லி

N.Kumaran

Recent Posts

Athleisure Exports: India’s Next Big Opportunity in Global Fashion

In recent years, athleisure—a blend of athletic and casual wear—has transformed from a niche trend…

16 hours ago

ஆடை ஏற்றுமதி (Readymade Garments) அக்டோபர் 2024 மாதத்தில் 35.06%  சதவீதம் வளர்ச்சி!

இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது முக்கிய துறைகளில் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் முதல் அக்டோபர் 2024 வரையிலான…

7 days ago

India’s Green Textile Revolution: Sustainability Trends to Watch in 2025

As we step into 2025, the Indian textile industry is on the verge of a…

2 weeks ago

Tiruppur MSME Facilitation Drive: A Step Forward for Small Businesses

On October 18, 2024, the District Industries Centre (DIC) of Tiruppur organized a highly impactful…

1 month ago

திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் அவர்களுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கலந்துரையாடல்!

திருச்சி சுங்கத் துறை தலைமை ஆணையர் எஸ்.கே.விமலநாதன் அவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சுங்கம் தொடர்பான சந்தேக நிவர்த்திக்கான…

1 month ago

Smart Textiles: Integrating Technology into Fashion for the Future

The fashion industry is constantly evolving, and one of the most exciting advancements in recent…

2 months ago