ஜெயவிஷ்ணு குளோத்திங் பிரைவேட் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் கே.எஸ். விஷ்ணு பிரபு – சிறப்புப் பேட்டி!
சமீப காலமாக திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் செயற்கை நூலிழை (MMF) ஆடைகள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.இது திருப்பூர் ஏற்றுமதிக்குச் சாதகமாக இருக்கும் என்றாலும், சிலர் இதிலிருக்கும் சில அம்சங்கள் பாதகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இது குறித்து தெளிவான தகவல்களும் விளக்கமும் பெற, கடந்த ஆறு ஆண்டுகளாக செயற்கை நூலிழை துணிகளுக்குச் சாயமேற்றும் ஆலையுடன் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வரும் ஜெயவிஷ்ணு குளோத்திங் பிரைவேட் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் கே.எஸ். விஷ்ணு பிரபு அவர்களைச் சந்தித்தோம். இவர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் அவர்களின் மகன் என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவருடைய கல்விப் பின்னனியும் ஆடை ஏற்றுமதித்துறையில் அவருக்கு இருக்கும் உலகலாவிய நுட்பமான அறிவும் வெகு சிலரே அறிந்திருக்கக் கூடும்.
கல்வியைப் பொறுத்தவரை ஈரோட்டில் பள்ளிப்படிப்பை படித்து 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். பின்பு புது டெல்லியில் புகழ் பெற்ற ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ்- கல்லுரியில் பி.காம்.,(ஹானர்ஸ்), பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங்) பின்பு அமெரிக்காவில் வெர்ஜீனியா காமன்வெல்த் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.(குளோபல் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்) என்று விரிகிறது பட்டியல். இனி அவரிடம் பேசுவோம்.
கேள்வி : எம்.எம். எஃப் என்று சொல்லப்படுகின்ற செயற்கை நூலிழை சாயமேற்றுதல் மற்றும் ஆடை ஏற்றுமதி குறித்து உங்கள் அனுபவங்களைக் கூறுங்களேன் ?
அமெரிக்காவில் படிப்பு முடித்து சுமார் நான்கு மாதங்கள் பணி அனுபவம் பெற்ற பின்பு ஊருக்குத் திரும்பினேன். ஜெயவிஷ்ணு குளேத்திங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2010 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்நிறுவனத்தில் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன். இங்கு ஆரம்பத்தில் காட்டன் துணிகளுக்கு மட்டும் சாயமேற்றிக் கொண்டிருந்தாலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எம்.எம்.எஃப் என்று குறிப்பிடப்படுகின்ற பாலியெஸ்டர் ரக துணிகளுக்கும் சாயமேற்றத் தொடங்கினோம்.
இங்கு, ஒரு குறிப்பிட்ட உள்நாட்டு ஆடை நிறுவனத்திற்காகப் பாலியஸ்டர் துணிகளுக்கு சாயமேற்றிக் கொடுக்கிறோம். தற்போது வரை அந்த நிறுவனமும் எங்களோடு சேர்ந்து வளர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்ப காலங்களில் நாங்கள் காட்டன் துணிகளுக்கு சாயமேற்றும் சாஃப்ட் ஃப்ளோ இயந்திரங்களில்தான் பாலியெஸ்டர் துணிகளுக்கும் சாயமேற்றினோம். காரணம் ஆப்போது பாலியெஸ்டர் டையிங்கிற்கு தேவை குறைவாக இருந்தது. மேலும், அந்த குறிப்பிட்ட உள்நாட்டுத் தயாரிப்பு ஆடைகளுக்கு அந்த தரமே (Quality Standard)போதுமானதாக இருந்தது.
தற்சமயம் நிறைய ஆர்டர்கள் விசாரணை வருகிறது. உள் நாட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தேவைகள் அதிகமாகியிருக்கிறது. நிறைய ஆர்டர்களுக்கான வாய்ப்புகள் வரத் தொடங்கி உள்ளது. விதவிதமான வித்தியாசமான துணிகளில் ஆடைகள் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே அதற்குத் தகுந்தாற்போல் நவீன சாயமேற்றும் இயந்திரத்தை
( Fongs Dycowin Long Tube Machine) இறக்குமதி செய்து சாயமேற்ற ஆரம்பித்திருக்கிறோம். இது ஒரு நுட்பமான இயந்திரம். அதாவது 70, 80 ஜிஎஸ்எம் அளவுள்ள மெல்லிய துணிகளுக்குக் கூட சாயம் ஏற்றும் திறன் கொண்டது. அதில் நிறைய மாதிரிகளை (Test Samples) எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
பாலியெஸ்டர் என்றாலே தரம் குறைந்து என்று நம் மனதில் பதிந்திருக்கிறது. இதனால் காட்டன் துணிகளுக்கும் மேம்பட்ட தரத்தில் இந்த இயந்திரத்தில் சாயமேற்றுவதன் மூலம் பாலியெஸ்ட்டர் ஆடைகளை உற்பத்தி செய்ய முடியும். மேலும் காட்டனைப் பொறுத்தவரை பயன்படுத்துவதில் சில வரையறைகள் இருக்கிறது, காரணம் அது இயற்கையாக விளைவது. ஆனால் பாலியெஸ்டரைப் பொருத்தவரை அது கிடையாது. ஏனென்றால் அது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்படுவது. எனவே, அதை நமக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ள முடியும்.
பொதுவாக சாஃப்ட் ப்ஃளோ மற்றும் ஏர்ஃப்ளோ இயந்திரங்களில் சாயமேற்றும் போது பாலியெஸ்டர் துணிகளில் கோடுகள் போன்ற குறைகள் (Streaks mark) நன்றாகத் தெரியும். அது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தது. ஆனால் இப்போதுள்ள இந்த புதிய இயந்திரத்தில் அது போன்ற குறைபாடுகள் இல்லை. சிறப்பாக சாயமேற்ற முடிகிறது.
இதுநாள் வரை இது போன்ற மெல்லிய மற்றும் வித்தியாசமான துணிகளுக்கு சாயமேற்றுவது மிகவும் சிரமம் என்பதால், இந்தத் துணிகளில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கான ஆர்டர்கள் வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தது. இப்போது நம் நாட்டிற்கு ஆர்டர்கள் வருகிறது. காரணம் தரமாக , சிறப்பாக சாயமேற்றும் தொழில் நுட்ப இயந்திரம் நம்மிடம் இருக்கிறது. இதனால் வெளிநாட்டு வர்த்தகர்களும் தயக்கமில்லாமல் ஆர்டர்கள் கொடுக்கிறார்கள்.
இனிமேல் பாலியெஸ்டர் ஆடைகள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் காட்டன் ஆடைகள் தயாரிப்பிலும் ஏற்றுமதி செய்வதிலும் நாம் அதிகபட்ச உயரத்தை எட்டி விட்டோம். பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நாம் தான் முதன்மையான இடத்தில் இருக்கிறோம். அதிலும் திருப்பூர் முக்கியமான இடத்தில் இருக்கிறது.
தற்சமயம் உள்ள சிரமம் என்ன என்றால், காட்டன் ஆடைகள் ஏற்றுமதியில் மிகப்பெரிய போட்டி உலக நாடுகளில் ஏற்பட்டு விட்டது. ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வெளி நாட்டு வர்த்தகர் ஒரு ஆடைக்கு வியாபார விசாரணைக்கு கேட்டால் திருப்பூரிலிருந்து ஒரு மூன்று நான்கு பேர் அந்த ஆர்டரைப் பெறப் போட்டியிடுவார்கள். பிற நாடுகளிலிருந்து சுமார் ஐம்பது பேர் போட்டியிடுவார்கள். ஆனால் தற்சமயம் ஒரு ஆர்டரைப் பெற 200-க்கும் மேற்பட்டவர்களின் போட்டியை உலகமெங்கும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தொழிலில் பெரிய சவாலாக இருக்கிறது.
இதற்கு மாற்றாக, இது போன்ற கடும் வர்த்தகப் போட்டியை சமாளிக்க பாலியெஸ்டர் ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத்தலாம். காட்டன் ஆடைகளைப் பொறுத்தவரை வர்த்தகர்கள் இந்த விலைக்கு வாங்க வேண்டும், இந்த விலைக்கு விற்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள், அவ்வளவுதான். ஆனால் பாலியெஸ்டரைப் பொருத்தவரை துணியின் தரம் மிகவும் முக்கியப் பங்காற்றும். போட்டியும் குறைவாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
கேள்வி : பாலியெஸ்டரில் எந்த மாதிரியான ஆடைகள் தயாரிக்கப்படுகிறது?
முக்கியமாக ஆக்டிவ்வியர் மற்றும் நைட் வியர் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது பாலியெஸ்டர் மட்டும் அல்லாமல் பாலியெஸ்டர் – லைக்ரா, டென்சில் பேஃப்ரிக், பாலி விஸ்கோஸ் மற்றும் நைலான் துணிகளிலும் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாம் இந்த ஆடைகளைத் தயாரிக்க நூல்களை எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதாக இறக்குமதி செய்து கொள்ள முடியும்.ஆனால் துணியின் தரம் 50- 60 சதவிகிதம் அதை ப்ராசஸ் செய்வதில்தான் உள்ளது. ஆனால் அதற்குறிய மேம்பட்ட ப்ராசசிங் வசதி திருப்பூரில் இல்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் ப்ராசசிங் துறை வளர்ந்து வருகிறது. அது வளர வளரத்தான் திருப்பூரின் வர்த்தகம் உயர வாய்ப்புள்ளது.
நாம் எப்படி காட்டனில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்களோ, அது போல சீனா, கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகள் செயற்கை நூலிலை ப்ராசசிங் கட்டமைப்பில் பலம் வாய்ந்தவர்கள், மற்றும் தேர்ந்த அனுபவம் உடையவர்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். ஆனாலும் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறுத்து விட முடியாது. நாம் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருந்தால் இன்னும் ஐந்து வருடங்களில் அவர்களுடன் அனைத்து விதங்களிலும் நாம் போட்டியிட முடியும்.
கேள்வி: பாலியெஸ்டர் போன்ற செயற்கை நூலிழை துணிகள் உள் நாட்டுத் தயாரிப்பை விட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போது விலை குறைவாக இருப்பதாகக் கூறுகிறார்களே, உண்மையா?என்ன காரணம்?
செயற்கை நூலிழை (MMF) துணிகளைப் பொறுத்தவரை அது உண்மைதான். யாரும் அதை மறுக்க முடியாது. காரணம் அதற்கான சூழலியல் அமைப்பு இன்னும் இங்கு வளரவில்லை. சாயமேற்றுவதற்கான நவீன வடிவமைப்பு மற்றும் பிற கட்டமைப்புக்கள் இன்னும் இங்கு பெரிய அளவில் மேம்பட வேண்டும். நானே இங்கு டையிங் வைத்திருக்கிறேன். எனக்கு தேவையான அளவு ஆர்டர்கள் இருப்பதால் நான் அதில் முதலீடு செய்வேன். பிற ஏற்றுமதியாளர்களுக்கும் அது போல ஆர்டர்கள் இருந்து அவர்களும் சூழலியலை மேம்படுத்தும் போது அவர்களும் வளர வாய்ப்புள்ளது.
கேள்வி : காட்டன் ஆடை ஏற்றுமதியிலிருந்து எம் எம் எஃப் ஆடைகள் ஏற்றுமதி செய்ய விரும்புவர்கள் எப்படித் தொடங்க வேண்டும்?
இங்கு சிரமம் என்பது வர்த்தகர்களுக்கு ஆடை விலை நிர்ணயம் செய்வதுதான். ஆர்டரில் இரண்டு விதம் உள்ளது. பாலியெஸ்டர் உட்பட எல்லா வகையான ஆடைகளிலும் அடிப்படை ஆடை (Basic Style) மற்றும் மதிப்புள்ள ஆடை (Value add Style) என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். குறைந்த மதிப்புள்ள ஆடைகளை எடுத்து ஏற்றுமதி செய்ய நிறைய போட்டி உலகம் முழுவதும் இருக்கும். அதனால் எம்.எம் . எஃப் ஆடைகளை ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் உரிய வர்த்தகர்களை தேர்வு செய்து அவர்களின் மதிப்பு மிக்க ஆடைகள் ஆர்டர்கள் பெற்று தொடங்கலாம்.
ஆனால் அதற்கான சுழலியல் அமைப்பை (Eco System Development) மேம்படுத்த வேண்டும். ஒரு வர்த்தகரிடம் வியாபாரம் செய்யும் போது நீண்ட கால உறவு இருப்பது போல தேர்வு செய்து ஆர்டர்கள் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பெற முடியும். தற்சமயம் ராணுவங்களுக்கு நிறைய தேவைகள் இருக்கிறது. மருத்துவத் துறையில் இதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. நீங்கள்தான் வர்த்தக வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும் என்பது உண்மைதான். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியெஸ்டர்டையிங்கில்ஈடுபட்டு வருகிறேன். முதல் மூன்று ஆண்டுகளுக்கும் அதற்கு பின்பு வந்த மூன்று ஆண்டுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. கடைசி மூன்று ஆண்டுகளில்தான்எங்களின் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.தொடக்க கால சிரமங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயணியுங்கள்.
கேள்வி: அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிற்கு செயற்கை நூலிழை ஆடைகள் ஆர்டர் வழங்கும் போது சில சீன தயாரிப்பு நிறுவனங்களிடம்தான் எம் எம் எஃப் ஆடைகள் வாங்க வேண்டும் என்று நாமினேஷன் (Nomination) செய்கிறார்களாமே? அப்போது இந்திய நிறுவனங்கள் பாதிக்குமே?
நிச்சயமாக இது ஒரு பிரச்சனைதான். ஆனால் இதை நீங்கள் இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் பார்வையில் பாருங்கள். இந்திய எம்.எம். எஃப் துணிகளை அங்கீகரிக்க அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இருக்கிறதா?என்று பார்ப்பார்கள். தரத்திற்கு துணிதான் ஒரு அடையாளம். ஒரு ஆடையின் தரத்தை நிர்ணயிப்பதில் துணி 60 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இந்த துணியைப் பற்றிய புரிதல் (Fabric Culture) இப்போதுதான் திருப்பூருக்கு வர ஆரம்பித்திருக்கிறது. சூழலியல் செயல்பாடுகள் தற்போதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே, அமெரிக்க ஐரோப்பிய வர்த்தகர்களின் தர எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை நாம் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அதுவரை இந்த நாமினேஷன் இருக்கத்தான் செய்யும். தற்போது உருவாகியுள்ள வேகத்தில் நாம் பயணம் செய்தால் நிச்சயம் நல்ல பலனைப் பெற முடியும். குறிப்பிட்ட கால கட்டத்தில் நமது பாலியெஸ்டர் துணிகள் அங்கீகரிகப்படும்.
கேள்வி : காட்டன் ஆடைகள் மட்டும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் எம் எம்.எஃப் ஆடைகள் உற்பத்தியை எப்படி தொடங்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
இதில் உள்ள வாய்ப்புகளை முதலில் கவனித்துப் பாருங்கள். ஜாரா (ZARA) ஹெச் & எம் (H&M) போன்ற ஷோரூம்களைப் பாருங்கள். 40 சதவீதம்தான் காட்டன் ஆடைகள் இருக்கும். மீதியுள்ளவை செயற்கை நூலிழை ஆடைகள்தான். ஆரம்பத்தில் இது போன்ற வர்த்தகர்களை அணுகலாம்.
முதலில் நாமே ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நமது ஏற்றுமதியில் 20 முதல் 30 சதவிகிதம் காட்டன் அல்லாத ஆடைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று. எங்கள் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் ஏற்றுமதியில் 30 சதவிகிதம் MMF ஆடைகளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையிலேயே சாயமேற்றும் இயந்திரங்கள் நிறுவ முதலீடு செய்தோம்.
அது எங்களுக்கு நல்ல பலன்களையே கொடுத்தது. காட்டன் ஆடைகள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு குறைந்த போது எங்களுக்கு MMF ஆடைகளுக்கான ஏற்றுமதி ஈடுகட்டியது. நான் திரும்பத் திரும்ப சொல்வது ஒன்றுதான். மதிப்பு மிக்க ஆடைகளை தரமாகக் கொடுக்க வேண்டும். அப்பொழுது வாடிக்கையாளர்கள் நம்முடன் வியாபரம் செய்யும் காலம் அதிகமானதாக இருக்கும். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் ரிஸ்க்எடுங்கள்.
எம் எம் எஃப் என்பதையே விடுங்கள். 20 முதல் 30 சதவிகிதம் காட்டன் அல்லாத ஆடைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று முடிவு எடுங்கள். அப்போது திருப்பூரில் சுற்றுச்சூழல் மேம்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் திருப்பூர் மிகப் பெரிய வளர்ச்சி பெறும்.
இறுதியாக ஒன்றை மட்டும் மனதில் கொள்ளுங்கள். நாம் நமது முதலீடுகளை எம் எம் எஃப் துறையில் அதிகரிக்க வேண்டும்.ஆர்டர் வந்தால் முதலீடு செய்யலாம் என்ற மன நிலையில் இருந்து வெளியே வாருங்கள், அது சரியானது அல்ல. ஏனென்றால் ஆர்டர் பெறுவதில் உள்ள முதல் வாய்ப்பை நாம் இழக்க வேண்டியதாக இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்கின்ற உத்வேகத்தோடு நாம் செயல்பட வேண்டும். என்றார்.
Leave a Reply